4/142, Suthanthiraponvila Nagar; Venugopalswamy 2nd Street; Parvathipuram, Nagarcoil-629 003; phone: 04652-259806; email: reclaimtherepublic@gmail.com


10 October, 2020

பிரதமர் அவர்களே: ஜெயப்ரகாஷ் நாராயணன் என்று ஒரு தேசபக்தர் இருந்தாரே அவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அன்பான மோடிஜி:

ஜே.பி. என்று அனைவராலும் அறியப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயணன் மறைந்த தினம் அக்டோபர் எட்டு. அவரது பிறந்த தினம் அக்டோபர் 11.ஜூன் 25-26/1975ல் நெருக்கடிநிலைப் பிரகடனத்தால் அணைக்கப்பட்ட இந்திய சுதந்திரத்தினை 1947களில் கட்டி எழுப்பியிருந்த சிற்பி மகாத்மா காந்தி என்றால் , நெருக்கடிநிலையினை வென்று இரண்டாம் சுதந்திரத்தை 1977ல் நமக்கு மீட்டெடுத்துத் தந்தவர் ஜே.பி.

அந்த நன்றியில் இந்தியப் பிரஜைகள் அனைவராலும் லோக் நாயக் என்றும் இரண்டாம் மகாத்மா என்றும் அழைக்கப்படும் அந்த ஜே.பி. யை உங்களுக்கு நினைவிருக்கிறதா திரு மோடி அவர்களே?

இருபதாம் நூற்றாண்டு முடியும் சமயம். வாஷிங்க்டன் நகரில் உள்ள லிங்கன் நினைவகத்தின் கோபுரத்தில் நின்று கொண்டு சுதந்திரம் என்பது என்ன என்பது பற்றி உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் குறிப்பிட்டார்: “இருபதாம் நூற்றாண்டின் கதை என்பது சுதந்திரம் வென்ற கதை. இதன்  உண்மையான அர்த்தத்தினை நாம் எப்போதும் மறக்கலாகாது. அதுபோலவே சுதந்திரம் வெல்வதற்காக முன்  நின்றவர்களையும், போராடி தங்கள் இன்னுயிரைக் கொடுத்து நமக்கெல்லாம் சுதந்திரம் என்னும் மாபெரும் பரிசினை அளித்துச் சென்றவர்களையும் நாம் எப்போதும் மறக்க முடியாது. “ மனித குலத்தில் ஆறில் ஒருபகுதி வசிக்கும் இந்தியாவிற்காக ஜே.பி.  இதைத்தான் செய்தார். ஒரு தடவை அல்ல,  இரண்டு தடவை. மகாத்மா காந்தி தலைமையில் அன்னியரிடமிருந்து விடுதலை பெற ஒரு தடவையும் , பின்பு அவரது தலைமையிலியே சுதேசி தர்பாரில் இருந்து விடுபட மறு தடவையும் அவர் ஆக்ரோஷமாகப் போராடி வென்றார். இந்தப் போராட்டத்தில் அவர் தனது இளமை, ஆரோக்கியம், குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் இழந்தார்.

அப்படிப்பட்ட ஒரு தேசபக்தரை நீங்கள் கொண்டாடவேண்டும் திரு மோடி. ஆனால் குறைந்தபட்சம் அவரை உங்களுக்கு ஞபகமாவது இருக்கிறதா?.

 உங்களுக்கு கூடுதலாக சில விவரங்களை நினைவு  படுத்த விரும்புகிறேன். அழியும் தருவாயில் இருந்த  ஜன்சங்கத்தினை காப்பாற்றி அரசின் ஒரு அங்கமாக ஆக்கிய அவருக்கு நன்றி கூரும் விதமாக உங்கள் குருநாதர் முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பேயி 1978 ம் ஆண்டிலே இவ்வாறு நன்றி பாராட்டினார்.” ஜே.பி. என்பது ஒரு தனி மனிதனின் பெயர்  மட்டுமல்ல. அது மனிதாபிமனத்தை குறிக்கும் ஒரு குறியீடு. திரு நாராயண் அவர்களை நினைக்கும் போதெல்லாம் ஒருவரின் மனதில் இரண்டு சித்திரங்கள் தோன்றும். அம்புகளால் ஆன படுக்கையில் படுத்திருக்கும் பிதாமகன் பீஷ்மரை ஒரு சித்திரம் நினைவூட்டும். கவுரவர்களுக்காக அந்த பீஷ்மர் யுத்தம் செய்தார். இந்த பீஷ்மர் தர்மத்திற்காக சமர் செய்தார். இரண்டாம் சித்திரம் சிலுவையில் அறையப்பட்ட தேவ குமாரனை நினைவூட்டும். அவரது வாழ்வும் தியாகமும் ஏசுநாதர் நமக்காக செய்த தியாகங்களை நினைவூட்டும்.

தன்னலமற்ற இந்த தியாகத்தின் வடிவத்தை  உங்களுக்கு நினைவிருக்கிறதா திரு மோடி அவர்களே..

இன்னும் கொஞ்சம் அதிகம் செல்வோம். நீங்கள் பிரதமர் ஆகும் முன்பு ஜே.பி. உங்கள் கதாநாயகன் மற்றும் ஆதர்சம் என்றும் பெரும் புரட்சியாளர் ஆன அவரது மாபெரும் இளைஞர் இயக்கத்தின் படைப்பு நீங்கள் எனவும் அவரின் வாரிசுதான் நீங்கள் எனவும் நீங்கள் பிரகடனம் செய்ததாக நான் நம்புகிறேன்.  இப்போதாவது அவரை நினைவுக்கு வருகிறதா மோடி அவர்களே?

துரதிர்ஷ்டவசமாக அது அப்படி இல்லை. கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக, அதிலும் சமீப காலமாக அதிகம்  நீங்கள் செய்து வருவது எல்லாம் எந்த கொள்கைகளுக்காக ஜே.பி. வாழ்ந்து மறைந்தாரோ அதற்கு நேர் எதிராக அல்லவா அனைத்தும்  இருக்கிறது. 

எதிர் வரும் தலைமுறைக்காக எந்த கொள்கைகளையும் சீல  நெறிகளையும் ஜே.பி.  விட்டுச் சென்று இருக்கிறார் என்பதனை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஜனநாயகம்::

“இந்திய இறையாண்மை அரசுக்கும் அதன் அமைப்புகளுக்கும் வழங்கியுள்ள அனைத்து அதிர்காரங்களும் மக்களிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது. இந்த மக்கள்தான் தேச நலனிற்காக இயற்கை வளங்களை பயன் கொள்வது பற்றிய ஒழுங்கு முறைகளை கட்டுப்படுத்துவார்கள்.” மக்களுக்கே அதிகாரம் என்பது ஜே.பி.வழங்கிய ஜனநாயக  மந்திரம் அல்லவா.

சுதந்திரம்:

‘சுதந்திரம் என்பது என் வாழ்வின் கலங்கரை வெளிச்சம் ஆகி அங்கேயே தங்கி விட்டது. அனைத்துக்கும் மேலாக மனித ஆளுமை சுதந்திரம் , மனதின் சுதந்திரம் ,ஆத்ம சுதந்திரம் என்பவைகளையே இது குறிக்கிறது. என் வாழ்வின் தீரா வேட்கை சுதந்திரம். வெறும் சோற்றுக்கோ, செல்வங்களுக்கோ,சுய பாதுகாப்பிற்கோ,அரசின் சிறப்பிற்கோ அல்லது வேறு எதுவாயினும் சரி, சுதந்திர விடயத்தில் சமரசம் என்பதே கிடையாது. ‘

வகுப்புவாதம்;

“அனைத்து மதங்களுமே அவரவர் பாணியில் வகுப்புவாதம் கொண்டிருந்தாலும், இந்து வகுப்புவாதம் பிற வகுப்புவாதங்களை விட அதிகம் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். அது எளிதில் இந்திய தேசியவாதம் என்ற முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டி விடும். “

முன்னேற்றம்:

வளர்ச்சி என்பதன் பொருள் சுதந்திர இந்தியாவை பிற சமூகங்கள் போல் அல்லாமல் சுயசார்புள்ள தேசமாக மாற்றுவதும், மேலை நாடுகளின் பாணியினைப் பின்பற்றி  பிரமாண்ட அளவில் தொழில்மயமாக்கல்,நகர்மயமாக்கல் மற்றும் தனியர்மயமாக்கல் என்று போய் விடாமல் இருப்பதும் ஆகும். பொருளாதார வளர்ச்சியில் தனியான ஒரு பாதையினை வகுக்க இருக்கும் இந்தியாவின் வேளாண் சார்ந்த பொருளாதாரம் என்பது தேவை சார்ந்தும்,  மனிதாபிமானத்துடனும், இந்த மண்ணின் வளம் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதில் சமநிலை காத்தும் இருக்கவேண்டும். அது போன்ற வளர்ச்சிப் பாதை மட்டுமே பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் ஆக இருக்கும்.

இந்துத்வா

இந்தியாவை இந்துக்களுடனும் இந்திய வரலாற்றை இந்து வரலாற்றுடனும் சமமாக்க முனைபவர்கள் தொன்மையான இந்திய வரலாற்றின் மற்றும் அதன் நாகரீகத்தின் மகத்துவத்தை  திசை திருப்பி அதில் இருந்து விலகிச்செல்கிறார்கள். முரண்பாடாகத் தோன்றினாலும் அப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையில் இந்துக்களுக்கும் இந்துயிசத்திற்கும் எதிரியே ஆவர். தங்களின் உன்னதமான மதத்தினையும் அதன் பெருந்தன்மையினையும், ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையினை  அவர்கள் இழிவுபடுத்துவது மட்டும் அல்லாமல் அதிக அளவில் இந்துக்களால் நிறைந்து நெய்யப்பட்டுள்ள  இந்த தேசத்தின் ஒற்றுமை இழைகளை வலுவிழக்கவும் வைத்து விடுகிறார்கள்.

இந்து ராஜ்யம்

தேச விடுதலைக்கான நெடிய போராட்டத்தின் ஊடாக , ஒன்றுபட்ட , வகுப்பு வாத எண்ணங்கள் அற்ற இந்திய தேசியத்தன்மை குறித்த ஒரு தெளிவான கருத்தாக்கம் கிளைத்தெழுந்தது, இதன் விளைவாக பிரிவினை வாத பிளவு  வாத தேசியம் பேசியவர்கள் அனைவரும் , அவர்கள் இந்துக்களோ, முஸ்லிம்களோ எவராயினும் சுதந்திரப்போரின் போது உதித்த இந்த ஒற்றுமைக் கோட்பாட்டிற்கேற்ப இந்த தேசியத்திற்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள். இன்று நாம் கேள்வியுறும் விலகிய,  வெறுப்பு மிகுந்த  தேசியவாதம்- சுதந்திரபோரின் போது பாடுபட்ட அனைவரின் நம்பிக்கைக்கும் எதிரானதாகவும் அறமற்றதாகவும் இருக்கிறது.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்

 காந்தியின் மரணத்தினைத் தொடர்ந்து ஆர்.எஸ்,எஸ், ஒரு  தலை மறைவு இயக்கமாக இருந்த போது முழுக்கவும் ஒரு கலாச்சார இயக்கமாக மட்டுமே அது இயங்குவது குறித்து அதிக அளவில் பிரஸ்தாபங்கள்  எழுந்தது. மதசார்பற்ற இயக்கங்களின் மந்தப் போக்கு கொடுத்த தைரியத்தில் தனது முகத்திரையினை கிழித்து பகிரங்கமாகவே பாரதீய ஜனசங்கத்தின் உண்மையான பின்புல சக்தி தானே என்று ஆர்.எஸ்.எஸ். வெளி வந்து விட்டது. வலுவாக தன்னை பிணைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்.சின் பிணைப்பைத் துண்டித்துக் கொண்டு வெளி வராத வரை தான் ஒரு மதசார்பற்ற கட்சி என்று கூறிக் கொள்ளும் ஜனசங்கத்தினை யாருமே ஒரு பொருட்டாக  எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது போலவே ஒரு  அரசியல் கட்சியின் ஆலோசனை அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாசார அமைப்பு மட்டுமே என்பதனையும் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். (1968) ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பைக் கலைத்து விட்டு ஜனதா கட்சியின் இளைஞர் கலாசார அமைப்பில்  தன்னை இணைத்துக் கொண்டு முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் பிற மத இளைஞர்களையும் தனது அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  தனது இந்து ராஸ்திர கொள்கையினை கைவிட்டு அதற்குப் பதிலாக இந்த தேசத்தில் வாழும் அனைவரையும் மதபேதமின்றி அரவணைக்கும் இந்திய தேசியக் கொள்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.(1977}

( இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. முக்கிய ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கத் தலைவர்கள் ஆன பாலசாஹெப் தேவரஸ், அடல் பிகாரி வாஜ்பேயி போன்றோர் தேர்தலில் வென்று 1977ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மதவாத அரசியலைக் கைவிட்டு விடுவதாகவும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கம் என இரட்டை உறுப்பினர்களாக இருப்பதைக் கைவிட்டு விடுவதாகவும் ஜே.பி. அவர்கள் முன்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இதனை நிறைவேற்ற எதுவும் தடை வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினைக் கலைத்து விடுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழி மதிக்கப்படவில்லை)

காச்மீர்

கசுமீரத்தின் மக்களை அதிகாரம் கொண்டு இந்தியா அடக்க முயன்றால் அது நமது ஆத்மாவினை நாமே கொலை செய்துகொள்வதற்கு சமம்.  முடிந்த அளவு சுயாட்சி உரிமை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். தொடர்ந்து அதிகாரத்தின் மூலம் அவர்களை அடக்கி ஆள்வதும், அந்த மாநிலத்தின் மத இன குணாம்சங்களை காலனி ஆதிக்கத்தின் மூலம் மாற்ற முயல்வதும் அரசியல் ரீதியாக ஒரு அருவருக்க வைக்கும் செயலாகும்.  தொடர்ந்து அவர்களை அடக்கிக் கொண்டே வந்தால்  அவர்கள்  களைத்துப் போய் ஓய்ந்து இந்திய யூனியனுக்குள் வந்து விடுவார்கள் என்று நாம் நினைத்தால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

எப்படி இதுவெல்லாம் எனக்கு தெரியும் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். எழுபதுகளின் மத்தியில் சண்டிகரின் அப்போதைய மாஜிஸ்திரேட் ஆக இருந்த நான் நெருக்கடி நிலையின் போது ஜெயிலில் வாட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜே.பியின் பொறுப்புப் பாதுகாவலர் ஆக இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் ஆழமாக விவாதித்து உள்ளோம். அப்போது எங்களுக்கு இடையில் ஏற்பட்ட அருமையான உறவு 1979ல் அவர் மறையும் வரை நீடித்திருந்தது.  நண்பனே என்றும் தான் பெறாத மகன் என்றும் ஜே.பி. என்ற பெரும் தேச பக்தரின்  வாயால் அழைக்கப்பட்ட பெருமிதம் எனக்கு இருக்கிறது.

இதனை நான் சொல்லவில்லை. சண்டிகரின் முதன்மை ஆணையர் ஆக இருந்து பின்னர் CAG ஆகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஆகவும், கர்நாடக கவர்னர் ஆகவும் ஆன எனது மேலதிகாரி ஆக இருந்த திரு டி.என். சதுர்வேதியின் கூற்று இது

“ இளமைத் துடிப்புடன் சண்டிகரின் டிபுடி கமிசனர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்  பொறுப்புகளை 1975ம் ஆண்டு ஏற்றிருந்த எம்.ஜி.தேவசகாயத்தினை  முசோரி யில் அவர் லால் பகதூர் சாஸ்த்ரி அகடமியில் ஐ.எ.எஸ். பயிற்சி எடுக்க வந்த போதில் இருந்தே அறிவேன்.  இந்திய இராணுவத்தில் இருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு வந்த தேவசகாயம் தலைமைப்பண்பு மிக்கவர். சட்டத்தின் ஆட்சியினை  உறுதி செய்வதிலும், பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்துவதிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இந்த இளம் அதிகாரியின் தோள்களில் ஜே.பி.யின் ஜெயிலர் ஆக இருக்கும் பொறுப்பு வந்து விழுந்தது.  ஒரு சிவில் சர்வன்ட் என்ற அளவில் மட்டுமே  பணியாற்றுவது தாண்டி தேவசகாயம் ஒரு வேலை செய்தார். ஏறத்தாழ தினமும் ஜே.பி.யைச் சந்தித்து அவருடன் நெருக்கமாக கருத்துக்களை  பகிர்ந்து கொள்வதை  அவர் வழக்கமாக்கி கொண்டார்.  தங்கள் உரிமைக்காக தடியடிகளைப் பரிசாகப் பெற்று சுதந்திரத்திற்காகப் போராடிய லட்சக்கணக்கானோரை ஆகர்சித்த ஒரு பெரும் மனிதனாக அவர் ஜே.பி.யைப் பார்த்தார்.  சுதந்திரத்திற்காக போராடிய பல்லாயிரவர் மனங்களில் மகாத்மா விதைத்த கொள்கைகளின் தொடர் கண்ணியாக அவர் ஜே.பி.யைக் கருதினார்.  அவரை அவருக்கு உரிய மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்.

சட்ட ரீதியாக மெதுவே விடுபட்டு தனது  சுயத்திற்கு திரும்பிய ஜே.பி. தனது அத்தனை உடல் உபாதைகளையும் சகித்துக்கொண்டு தான் செய்த ஒரு தவறான நெருக்கடி நிலையினைத் தோற்கடித்து சரி செய்ய நினைத்தார்.  ஜே.பி.யை அவரது முழு பிரகாசத்துடன் , அனைத்து தவறுகளையும் எதிர்த்துப் போராடும் அதே மன உறுதியுடன்  தேவசகாயம் மீண்டும் கொண்டு வந்தார். அவர் ஒரு ஜெயிலர் ஆக மட்டும் இருக்கவில்லை. “ஜே.பி.க்கும் இந்திரா காந்திக்கும் இடையில் மறுபடியும் நல்லுறவு நிலவ சளைக்காமல் பாடுபட்ட ஒரு நல்லெண்ணத் தூதர் ஆகவும் இருந்தார். ….  உள்துறை அமைச்சருக்கும் ஹரியானா முதலமைச்சருக்கும் நவம்பர் 3, 1977 ல் இந்தியில் தான் எழுதிய ஒரு கடிதத்தில் ஜே;பி.யே இது பற்றி குறிப்பிட்டுள்ளார். “ நான் சண்டிகரில் சிறைப்பட்டிருந்தபோது திரு தேவசகாயம் தனது அலுவல் கடமையினை அப்பழுக்கின்றி நிறைவேற்றிய அதே சமயத்தில்  என்னிடம் மிகுந்த மரியாதையுடனும் நடந்துகொண்டார். அவரது பல்வேறு அன்பான நடவடிக்கைகளுக்கு நான் என்றும்  நன்றி உள்ளவன் ஆக இருப்பேன். இந்த தனிப்பட்ட பிரியம் தாண்டியும் என்னை வெகுவாக கவர்ந்தது அவரது நிர்வகிக்கும் திறன். அர்பணிப்பும் திறனும் கொண்ட ஒரு தேசபக்தி மிக்க அதிகாரி அவர்”

அது அப்படியே இருக்கட்டும்.

மோடி அவர்களே, இந்திய தேசத்தின் அமைப்பு மற்றும் அரசியல் சட்ட ஒழுங்கினையே தனது சொத்தாகக் கொண்டிருந்த  ஜே.பி.யின் கொள்கைகளில் இருந்து எவ்வளவு தூரம் நீங்கள் விலகிச் சென்று விட்டிர்கள் என்பதை நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மக்களுக்கு அதிகாரம் இல்லாமல் போய்விட்ட இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு விட்டது. சுதந்திரம் அதீத அபாயத்தில் இருக்கிறது. மதவாதம் அதிகார பூர்வமாகவே வளர்க்கப்படுகிறது. வளர்ச்சி பின்னோக்கிச் சென்று விட்டது. இந்துத்வா ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இந்து ராஜ்யம் அரச முடிவாகி விட்டது. அரசினை ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது. காச்மீர் ஒடுக்கப்பட்டு ரானுவமயமாக்கப்பட்டு விட்டது. மாநில உரிமைகள் எல்லாம் மத்திக்கு மாற்றப்பட்டு ஜனநாயக கடமையாற்றும் நிறுவன உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. மெதுவே மெதுவே இந்திய ஜனநாயகம் தனிப்பட்ட சுயநலக் குழுவின் வடிவம்  பூண ஆரம்பிக்கிறது. ஜே.பி.விட்டுச் சென்ற பாரம்பர்யம் மண்ணில் கலக்கிறது

வழக்கப்படி 1975 ஜுலை 21 ல் நான் ஜே.பி.யைச் சந்தித்தேன். எமர்ஜென்சியினை ஆதரித்து பாராளுமன்றம் இயற்றிய தீர்மானம் உட்பட பல விடயங்கள் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஜே.பி. மிகவும் மனம் உடைந்து இருந்தார். நான் விடை பெறும்போது , பல நாட்களாக அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார். பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்ப எழுதப்பட்ட கடிதம் அது. எனது கைகளைப் பிடித்துக்கொண்டு நடுங்கியவாறுஅவர் சொன்னார். தேவசகாயம், இதனை எழுதியதற்காக நான் தண்டிக்கப்படலாம். பரவாயில்லை, நான் என் கடமையினைச் செய்து விட்டேன்.

15  பக்கம் கைப்பட அவர் எழுதிய அந்தக் கடிதத்தை பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பும் முன்பு நான் படித்து விட்டேன். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இந்திரா காந்தி அழிக்க முயல்வதாக மிகவும் வலுவான வலி மிகுந்த குற்றச்சாட்டுகள் நிரம்பிய அந்த கடிதம் பிரதமரை வெகுவாக அசைத்து விட்டது.

நான் நிறைவு செய்ய விழைகிறேன்.  நீங்களும் உங்களின் உற்றவர்களும் ஏற்கனவே மகாத்மாவின் கொள்கைகளை குழி தோண்டி ஆழமாக புதைத்து விட்டீர்கள். இப்போது உங்கள் பிதாமகன் பீஷ்மரின் கொள்கைகளுக்கு துரோகம் இழைக்கிறீர்கள், இந்தியக் குடியரசு நிலை கொள்ள கால்கள் மிஞ்ச வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களுக்கு எழுபது வயதாகி விட்டது. நான் எண்பதை நெருங்கி எனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் நுழைகிறேன். இருந்தபோதும் உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று எனக்குத்  தெரியவில்லை. எனவே 1975 ம் வருடம் ஜுலை  21 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு ஜே.பி. எழுதிய இந்த வரிகளில் நுழைகிறேன்.

“படித்து முடித்துவிட்டு நான் இந்த நாட்டிற்காக என் வாழ்நாள் முழுவதும் கொடுத்து விட்டேன். பிரதிபலனாக நான் ஒன்றும் எதிர்பார்க்க வில்லை. அப்படிப்பட்ட ஒரு மனிதன் தரும் அறிவுரைக்கு நீங்கள் செவி மடுப்பீர்களா? தேசப்பிதா அமைத்துத் தந்த அடிப்படையை அழித்து விடாதீர்கள். நீங்கள் தேர்ந்த பாதை முழுவதும் துயரமும் சண்டைகளுமே நிரம்பி உள்ளது. ஒரு பெரும் பாரம்பர்யதினையும் , ஜனநாயகத்தினையும், மாண்புகளையும் நீங்கள் வரித்துக் கொண்டிருந்தீர்கள். அதன் இடிபாடுகளை வரும் தலைமுறைக்கு விட்டுச் சென்று விடாதீர்கள். அதனை எல்லாம்  மறுபடியும் சரி செய்ய வெகு காலம் பிடிக்கும். அதில் எனக்கு ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி அதனை வீழ்த்தியவர்களால் வெகு காலத்திற்கு  அவமானங்களையும் சர்வாதிகாரத்தினையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் நசுக்கப்பட்டாலும் மனிதர்களின் ஆன்ம பலத்தை  மட்டும் என்றுமே அழிக்க முடியாது. “      “

எதுவெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சொல்லி விட்டதால் இத்துடன் நான் நிறைவு செய்கிறேன்..

Yours Truly,

Major M. G. Devasahayam IAS (Retd)

Chairman

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: